1 பந்தில் 22 ரன்கள்: வெஸ்ட் இண்டீசில் நடந்த போட்டியில் மிரள வைத்த ஆர்சிபி வீரர்


1 பந்தில் 22 ரன்கள்: வெஸ்ட் இண்டீசில் நடந்த போட்டியில்  மிரள வைத்த  ஆர்சிபி வீரர்
x

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் சிபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி வீரர் ஒரே பந்தில் 22 ரன்கள் அடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போல, பல்வேறு நாடுகளிலும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சர்வதேச அளவில் அதிக பார்வையாளர்களை கொண்ட கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒன்றாக சிபிஎல் எனப்படும் கரீபியன் லீக் தொடர் உள்ளது.

இந்த தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் ரோமாரியோ ஷெபர்ட், கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். அதாவது, ஒரே பந்தில் 22 ரன்கள் விளாசி கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்துள்ளார் ஷெபர்ட். அது எப்படி ஒரே பந்தில் 22 ரன்கள் அடித்தார் என பலரும் வியந்து படிப்பது புரிகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் செயிண்ட் லூசியா அணியும் மோதின. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய ஷெபர்ட், 7-வது வீரராக களம் இறங்கி 34 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார்.

அவர் பேட்டிங் செய்யும் போது 15-வது ஓவரை ஒஷேன் தாமஸ் வீசினார். 15-வது ஓவரின் மூன்றாவது பந்தை நோ-பாலாக வீசினார். அடுத்த பந்தை வைட் பந்தாக வீசினார். அதன் பிறகு வீசிய பந்தும் நோ-பாலாகி, அதை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஷெபர்ட். இதனால் மீண்டும் ஃப்ரீ ஹிட் கிடைத்தது. அந்த பந்தும் நோ-பாலாக, இதையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதனால் அடுத்த பந்தும் ஃப்ரீ ஹிட் ஆனது. நல்லவேளையாக இந்த பந்தை நோ-பால் இல்லாமல் வீசினார். ஆனாலும் ஷெபர்ட் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.

இப்படியாக ஒரே பந்தில் 22 ரன்கள் அணிக்கு கிடைத்தது. எளிதாக சொல்வது என்றால்,

1 நோ-பால் (1 ரன்)

1 வைட் (1 ரன்)

நோ-பால் + சிக்ஸர் (7 ரன்)

நோ-பால் + சிக்ஸர் (7 ரன்)

அடுத்த பந்தில் சிக்ஸர் (6 ரன்)

இதனால், மூன்றாவது பந்தை முடிக்க மட்டும் 5 பந்துகளை ஒஷேன் தாமஸ் வீசினார். கற்பனைக்கே அப்பாற்பட்ட, மறக்க முடியாத ஓவராக ஒஷேன் தாமஸ்க்கு மாறியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரோமாரியோ ஷெபர்ட், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். சென்னைக்கு எதிராக அவர் 14 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிவேக அரைசதம் விளாசியவர் என்ற பெருமை அவருக்கு உள்ளது.

1 More update

Next Story