உண்மையிலேயே இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று ஏனென்றால்... - ருதுராஜ் பேட்டி

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
Image Courtesy: Twitter 
Image Courtesy: Twitter 
Published on

சென்னை,

ஐ.பி.எல் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி சென்னையின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 141 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 67 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின் சென்னை கேப்டன் ருதுராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

உண்மையிலேயே இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. ஏனெனில் நான் ஐ.பி.எல் தொடரின் முதல் அரைசதத்தை அடிக்கும் போது என்னுடன் தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது நாங்கள் இருவரும் போட்டியை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்தோம். அதன் பிறகு தற்போது கேப்டனாக நான் முதல் அரைசதத்தை அடிக்கும் போதும் தோனி என்னுடன் இருந்துள்ளார்.

இப்போதும் நாங்கள் இருவரும் போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்துள்ளோம். இந்த மைதானத்தில் 150 முதல் 160 ரன்கள் வரை இருந்தால் கடினமாக இருந்திருக்கும். இந்த மைதானம் சிக்ஸ் அடிப்பதற்கு சாதகமான மைதானம் அல்ல. பவுண்டரிகளை அடித்து ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தால் ரன்கள் வரும் என்பதே உண்மை. ஜடேஜா பவர்பிளேவிற்கு பிறகு வந்து மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார்.

எங்கள் அணியில் உள்ள வீரர்களுக்கு தனித்தனியே நாங்கள் எதுவும் அட்வைஸ் செய்ய தேவையில்லை. ஏனெனில் எல்லோருமே அவர்களது பங்களிப்பை உணர்கிறார்கள். மேலும் தோனி, பிளமிங் போன்றவர்கள் நம்முடன் இருப்பதனால் வீரர்களுக்கு எந்த அழுத்தமும் கிடையாது. இந்த போட்டியின் மூலம் மீண்டும் பார்முக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com