

கவுகாத்தி,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கவுகாத்தில் நேற்று நடைபெற்ற 16வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 18 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது,
பேட்டிங்கின்போது பவர் பிளே ஓவர்களிலேயே நாங்கள் விக்கெட்டுகளை விட்டுவிட்டோம். ஆனாலும், இறுதியில் 202 ரன்கள் குவித்தோம். இது நல்ல முன்னேற்றம்தான். அதேவேளை, ராஜஸ்தான் பவர்பிளேயில் மிகவும் சிறப்பாக ஆடியது. குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐபிஎல் போன்ற சவால் நிறைந்த கிரிக்கெட்டில் ஆடும்போது சில தவறுகள் நிகழும். ஆனால் அந்த தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேறி செல்ல வேண்டும்’ என்றார்.