

சென்னை,
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்தியாவை வலிமையான அணியாக உருவாக்குவதில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மிக முக்கிய பங்கு வகித்துள்ளதாக கூறியுள்ளார். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள பாண்டிங், ஐபிஎல் போட்டிகளின் அழுத்தமான சூழ்நிலைகள் இந்திய வீரர்களை சர்வதேச கிரிக்கெட்டின் சவால்களுக்கு சிறப்பாக தயார் செய்கின்றன என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா, தனது பட்டத்தை வெற்றிகரமாக தக்க வைத்த முதல் அணியாக சாதனை படைத்தது. ஆமதாபாத்தில் நடைபெற்ற அந்தப் போட்டிக்குப் பிறகு, ‘தி ஐசிசி ரிவ்யூ’ நிகழ்ச்சியில் பேசிய பாண்டிங், கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் வெள்ளை பந்து சாதனைகளை பாராட்டினார்.
அவர் கூறுகையில்,
``கடந்த 6 ஆண்டுகளாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் செயல்பாடு பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. அவர்கள் வைத்திருப்பது வெறும் டி20 அணி மட்டுமல்ல, மிகவும் வலிமையான ஒரு இந்திய வெள்ளை பந்து அணி. இதற்கு ஐபிஎல்லும் மிக முக்கிய காரணம். அங்கு கடும் அழுத்தமான சூழ்நிலைகளை சந்தித்து பல்வேறு அனுபவங்களை பெற்ற வீரர்கள்தான் இப்போது இந்திய தேசிய அணியில் இடம்பிடித்து, இரண்டு உலகக் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளனர்’’ என்றார்.