

சென்னை,
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் காலமானார். ஸ்டேஜ்-4 கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்த துயரச் செய்தியை இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் உறுதிப்படுத்தினார். இந்த இழப்பு ரிங்கு சிங்கிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய துயரமாகும். கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் வெற்றிப் பயணத்தின் பின்னணியில் அவரது தந்தையின் தியாகம் மிகப் பெரிய காரணமாக இருந்தது. அலிகரில் எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளராக பணியாற்றிய அவர், குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தாலும், மகன் கிரிக்கெட்டில் முன்னேற வேண்டும் என்ற கனவை ஒருபோதும் கைவிடவில்லை.
பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், ரிங்குவின் பயிற்சி, கிரிக்கெட் உபகரணங்கள், போட்டிகளில் பங்கேற்பு உள்ளிட்ட தேவைகளில் எந்தவித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இந்த தியாகமும், உறுதியும் தான் ரிங்கு சிங்கை இன்று இந்திய அணியில் விளையாடும் நிலைக்கு கொண்டு வந்த முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.