ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட பலத்த காயம்: போட்டியில் இருந்து வெளியேறுகிறாரா..?

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது.
மான்செஸ்டர்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று தொடங்கியது.
இந்திய அணியில் மூன்று மாற்றமாக கருண் நாயர், நிதிஷ்குமார் ரெட்டி, ஆகாஷ்தீப் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஷர்துல் தாக்குர் மற்றும் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அன்ஷூல் கம்போஜ் சேர்க்கப்பட்டனர். அரியானாவைச் சேர்ந்த கம்போஜ், இந்தியாவின் 318-வது டெஸ்ட் வீரர் ஆவார். 1990-ம் ஆண்டில் அனில் கும்பிளேவுக்கு பிறகு இந்த மைதானத்தில் ஒரு இந்தியர் டெஸ்டில் அறிமுகம் ஆவது இதுவே முதல் முறையாகும்.
இங்கிலாந்து அணியில் காயமடைந்த சோயிப் பஷீருக்கு பதிலாக 8 ஆண்டுக்கு பிறகு சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசன் திரும்பினார். தொடர்ந்து 4-வது முறையாக 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை மனதில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் களம் புகுந்தனர். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழல் நிலவிய போதிலும் இருவரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை திறம்பட சமாளித்தனர். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டிய இவர்கள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். அப்போது இந்தியா விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்கு பிறகு இந்த கூட்டணியை வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் உடைத்தார். ஸ்கோர் 94-ஐ எட்டிய போது லோகேஷ் ராகுல் 46 ரன்களில் (98 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் நிதானத்தை கடைபிடித்தார்.
மறுமுனையில் தனது 12-வது அரைசதத்தை அடித்த ஜெய்ஸ்வால் (58 ரன், 107 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) இடக்கை சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசனின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஹாரி புரூக்கிடம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் (12 ரன்) நிலைக்கவில்லை. பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து ஸ்டம்புக்கு மேலாக செல்வதாக நினைத்து பேட்டை உயர்த்தினார். ஆனால் பந்து அவரது காலுறையில் பட்டு, எல்.பி.டபிள்யூ. ஆக மாறியது.
இதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சனுடன், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கைகோர்த்து ஸ்கோரை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.
துரதிர்ஷ்டவசமாக ரிஷப் பண்டுக்கு (37 ரன்னில்) பந்து காலில் தாக்கியதால் பாதியில் வெளியேற நேரிட்டது. கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தை 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முயற்சித்த போது பந்து, பேட்டில் லேசாக உரசியபடி அவரது வலது காலை பதம் பார்த்தது. ஷூவை கழற்றி பார்த்த போது, பாதத்தில் ரத்தம் கசிந்தது. வலியால் துடித்த ரிஷப் பண்ட் (37 ரன்) அத்துடன் வெளியேறினார்.
காலில் ஏற்பட்ட காயத்தால் வலி தாங்க முடியாமல் ஆம்புலன்ஸில் ரிஷப் பண்ட் அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சை எடுத்து வரும் அவர் 2-வது நாளான இன்று பேட் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் 1000 ரன்களை விளாசிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்த சில நிமிடங்களிலேயே அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் ரசிகர்கள் சோகம் அடைந்தனர்.
முன்னதாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ரவீந்திர ஜடேஜா (19 ரன்), ஷர்துல் தாக்குர் (19 ரன்) அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.






