கே.எல்.ராகுல் சதமடிக்க அவசரப்பட்டு ஓடி விக்கெட்டை பறிகொடுத்த ரிஷப் பண்ட்.. வீடியோ வைரல்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
கே.எல்.ராகுல் சதமடிக்க அவசரப்பட்டு ஓடி விக்கெட்டை பறிகொடுத்த ரிஷப் பண்ட்.. வீடியோ வைரல்
Published on

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் அடித்திருந்தது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து பந்துவீச்சை மிகுந்த கவனத்துடன் எதிர்கொண்ட பண்ட் - ராகுல் ஜோடி பொறுமையாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய பண்ட் தனது ஸ்டைலில் சிக்சர் அடித்து அரைசதத்தை எட்டினார். மறுமுனையில் கே.எல்.ராகுல் சதத்தை நோக்கி முன்னேறினார்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிய இந்த ஜோடி 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் பிரிந்தது. ரிஷப் பண்ட் 74 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

97 ரன்களில் இருந்த கே.எல். ராகுல் அந்த ஓவரின் முதல் பந்தில் சிங்கிள் அடித்து 98 ரன்களை தொட்டார். அடுத்த பந்தை சந்தித்த பண்ட் டாட் செய்தார். அதேவேளை 98 ரன்களில் இருந்த கே.எல்.ராகுல் உணவு இடைவேளைக்கு முன் சதத்தை அடிக்கட்டும் என்று நினைத்த பண்ட் 3-வது பந்தில் சிங்கிள் எடுக்க முயற்சித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பண்ட் அடித்த பந்தை பிடித்த ஸ்டோக்ஸ் அற்புதமாக ரன் அவுட் செய்தார். இதனால் அவசரப்பட்டு ஓடிய பண்ட் ரன் அவுட் ஆனார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதோடு உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளை முடிந்ததும் களமிறங்கிய கே.எல்.ராகுல் சதமடித்த நிலையில் அவுட்டானார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com