ஹர்ஷல் பட்டேல் உடன் நடந்த வார்த்தை மோதலுக்கு என்ன காரணம்? - ரியான் பராக் விளக்கம்

ஐபிஎல் போட்டியில் ஹர்ஷல்- ரியான் இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Image Courtesy : BCCI / IPL 
Image Courtesy : BCCI / IPL 
Published on

மும்பை,

நடந்து முடிந்த ஐபிஎல் 15 வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் ஆல்ரவுண்டராக விளையாடியவர் ரியான் பராக் . இவர் களத்தில் நடந்து கொள்ளும் விதத்திற்காக ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர். இந்த ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ரியான் பராக் இக்கட்டான சூழலில் களமிறங்கி 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவு பெற்றதை அடுத்து ரியான் பராக் டிரெஸ்ஸிங் அறை நோக்கி செல்ல திடீரென ஹர்ஷல் பட்டேல் அவரை நோக்கி வேகமாக வந்தார். இருவரும் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் அணியை சேர்ந்த உதவியாளர் ஒருவர் இவர்களை சமாதானம் செய்து அனுப்பினார்.

பின்னர் அதே போட்டியில் போட்டி முடிந்த பிறகு ஒவ்வொரு வீரர்களும் எதிரணி வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் அனைத்து வீரர்களுக்கும் கைக்குலுக்கி வந்தார். அப்போது ஹர்சல் படேலிடம் ரியான் பராக் கை நீட்டியபோது, அவர் ரியான் பராக்கை கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட்டார். இந்த நிகழ்வும் அப்போது பேசுபொருளானது.

இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து ரியல் பராக் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது :

கடந்த வருடம் நான் ஹர்சல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தேன். அப்போது டிரெஸிங் ரூம் நோக்கி அவர் என்னை கைகாட்டி இருக்கிறார். அப்போது நான் கவனிக்கவில்லை. விடுதிக்கு வந்து மறு ஒளிபரப்பை தொலைக்காட்சியில் பார்க்கும் போது ஹர்சல் பட்டேல் செய்தது என் மனதை பாதித்தது.

இந்த நிலையில், மீண்டும் இந்த சீசனில் ஹர்சல் பட்டேலை பார்த்த போது, அவர் செய்தது நினைவுக்கு வந்தது. இதனால், அவர் பந்துவீச்சில் அடித்துவிட்டு, அவர் கடந்த ஆண்டு செய்ததை நான் மீண்டும் செய்தேன். இது தான் மோதலுக்கு காரணம். அப்போது முகமது சிராஜ் என்னிடம் வந்து "நீ சின்னப் பையன், சின்னப் பையன் மாதிரி நடந்து கொள்" என்று கூறினார். நான் அவரிடம் நான் உங்களிடம் எதுவும் சொல்லவில்லை என தெரிவித்தேன்.

இவ்வாறு ரியான் பராக் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com