ரோகித் சர்மா அதனை நிரூபித்துள்ளார் - பாக்.முன்னாள் வீரர் பாராட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சதம் விளாசினார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

கராச்சி,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

இதில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5 ஓவர்களில் 304 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 7 சிக்சர்கள் உள்பட 119 ரன்கள் குவித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தொடருக்கு முன்பு வரை இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து நிறைய விமர்சனங்கள் நிலவின. ஆனால் அனைத்து விமர்சனங்களுக்கும் இந்த சதத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சுமாரான பார்மில் இருக்கும்போது மெதுவாக விளையாடி சதத்தை அடிக்க வேண்டும் என்று ரோகித் சர்மா நினைக்கவில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். மாறாக டக் அவுட்டானாலும் பரவாயில்லை என்ற வகையில் கொஞ்சமும் பயப்படாமல் அசத்திய ரோகித் சர்மா பார்ம் தற்காலிகமானது, கிளாஸ் நிரந்தரமானது என்பதை நிரூபித்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இது போன்ற சூழ்நிலைகளில் அவர் டக் அவுட்டாவது மோசமான விஷயமாக இருக்கும். ஆனால் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தின் மூலம் எதிரணியை வீழ்த்த வேண்டும் என்ற வகையில் விளையாடிய ரோகித் சர்மா தன்னுடைய செயல்பாடுகளால் அனைவரையும் அமைதிப்படுத்தினார். நாம் அடிக்கடி பார்ம் என்பது தற்காலிகமானது கிளாஸ் நிரந்தரமானது என்று சொல்வோம். அதனை ரோகித் சர்மா நிரூபித்துள்ளார்.

இந்த தொடரை இந்தியா வென்று இருக்கலாம். ஆனால் இங்கிலாந்து ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தால் கூட அவர்கள் இந்த தொடரில் அனுபவத்தை சம்பாதிப்பார்கள். அந்த வகையில் அவர்கள் இந்தத் தொடரில் எதையும் இழக்கவில்லை. இந்த தொடரிலிருந்து அவர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்காக நல்ல பாடத்தை எடுத்து வருவார்கள். எனவே இப்போதும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு தகுதி பெறும் எனது அணிகளில் ஒன்றாகவே இருக்கிறது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com