'ரோகித் சர்மா அபாயகரமான பேட்ஸ்மேன்'- பாகிஸ்தான் துணை கேப்டன் ஷதாப் கான் பேட்டி

இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த உலகக் கோப்பையில் அபாயகரமான பேட்ஸ்மேனாக இருப்பார் என்று பாகிஸ்தான் துணை கேப்டன் ஷதாப் கான் கூறியுள்ளார்.
'ரோகித் சர்மா அபாயகரமான பேட்ஸ்மேன்'- பாகிஸ்தான் துணை கேப்டன் ஷதாப் கான் பேட்டி
Published on

ஐதராபாத்,

ஷதப் கான் பேட்டி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி தற்போது பயிற்சி ஆட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் அந்த அணியின் துணை கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான ஷதப் கான் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான்- இந்தியா (அக்.14-ந்தேதி) மோதலுக்கு இன்னும் பல நாட்கள் உள்ளன. அதற்கு முன்பாக எங்களுக்கு ஒரு பயிற்சி ஆட்டம் இருக்கிறது. உலகக் கோப்பையிலும் இரு ஆட்டங்கள் உள்ளன. பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இமாம் உல்-ஹக் எங்கள் அணிக்காக தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். சில ஆண்டுகளாக நன்றாக ஆடுகிறார்கள். அதனால் உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடுவதை எதிர்நோக்கி உள்ளோம்.

எந்த அணி பந்து வீச்சில் அசத்துகிறதோ அந்த அணியே உலகக்கோப்பையை வெல்லும் என்பது எனது நம்பிக்கை. ஏனெனில் இந்திய ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமானவை. பவுண்டரி தூரமும் குறைவு. இத்தகைய சூழலில் பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவதும், விக்கெட் வீழ்த்துவதும் கடினம். எனவே சிறப்பாக பந்துவீசும் அணியே கோப்பையை வெல்லும். எங்களிடம் உலகத் தரம் வாய்ந்த பவுலர்கள் உள்ளனர். அவர்களை சரியாக பயன்படுத்தி சாதகமாக எடுத்துக் கொள்வதே எங்களது இலக்கு. நாங்கள் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டால் உலக சாம்பியனாக உருவெடுப்போம்.

ரோகித்சர்மா- குல்தீப்

பேட்டிங்கை பொறுத்தவரை இந்தியாவின் ரோகித் சர்மாவை மிகச்சிறந்த வீரர் என்று சொல்வேன். அவர் களத்தில் நிலைத்து விட்டால் அபாயகரமானவராக மாறி விடுவார். அதன் பிறகு அவரது விக்கெட்டை வீழத்துவது கடினமாகி விடும். தனது அதிரடியான ஷாட்டுகளால் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை தெறிக்க விடுவார். கடைசியில். பவுலர்கள் நிலைமை தான் பரிதாபமாக இருக்கும். ஒரு லெக் ஸ்பின்னராக இந்தியாவின் குல்தீப் யாதவை பிடிக்கும். அவர் நல்ல பார்மில் உள்ளார். இந்தியாவில் உள்ள பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளத்திலும் சிறப்பாக பவுலிங் செய்கிறார்.

சமீபத்திய ஆட்டங்களில் எனது பந்து வீச்சு மெச்சும்படி இல்லை. ஒரு வீரரின் செயல்பாடு திருப்தி அளிக்காத போது மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளேன். ஆசிய போட்டிக்கு பிறகு கிடைத்த சிறிய இடைவெளி பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு ஷதப் கான் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com