'உனக்கு என்ன ஹீரோனு நினைப்பா' சர்பராஸ் கானை எச்சரித்த ரோகித் சர்மா - வைரலாகும் வீடியோ... என்ன நடந்தது..?

இந்திய அணியின் இளம் வீரர் சர்பராஸ் செய்த தவறை உடனடியாக ரோகித் சர்மா திட்டி திருத்திய சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
Image Grab By Video Posted On @RichKettle07
Image Grab By Video Posted On @RichKettle07
Published on

ராஞ்சி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் 353 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட்122 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 103.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 307 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் துருவ் ஜூரேல் 90 ரன்னும், ஜெய்ஸ்வால் 73 ரன்னும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 53.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி 60 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா தரப்பில் ரோகித் 24 ரன்னுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 152 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் போட்டியின் போது இளம் வீரர் சர்பராஸ் கானை இந்திய கேப்டன் ரோகித் சர்மா எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணி அப்போது இரண்டாவது இன்னிங்ஸில் 142/8 என்ற நிலையில் பேட்டிங் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது 49-வது வீசிய குல்தீப் யாதவ் போக்ஸூக்கு எதிராக ஒரு ரன்னை விட்டுக்கொடுத்த பிறகு ஷோயப் பஷீர் ஸ்டிரைக்கிற்கு வந்தார்.

அப்போது 5வது பந்தை வீசுவதற்கு முன்பாக இந்திய கேப்டன் ரோகித் ஷோயப் பஷீருக்கு நெருக்கமாக பீல்ட் செட்டிங்கை மாற்றினார். பஷீருக்கு அருகில் ஷார்ட் லெக் பீல்டிங்கில் நிற்க சர்பராஸ் வந்த போது அவர் ஹெல்மெட்டை அணியாமல், குல்தீப் யாதவ்விடம் பந்துவீசுமாறு கேட்டுக்கொண்டார்.

அதனை பார்த்த ரோகித் சர்மா அவரை, "பொறு ஹெல்மெட் வந்துவிடும்" என தடுத்தார். ஆனால் "பரவாயில்லை இரண்டு பந்துகள்தானே" என்று ரோகித்தை சர்பராஸ் சமாதனம் செய்ய முயன்றார். அப்போது கத்திக்கொண்டே சர்பராஸ் கான் அருகில் வந்த ரோகித், "ஹீரோவாக இருக்க முயற்சிக்காதே, முதலில் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு பீல்டிங் செய்" என்று அக்கரையோடு அவருடைய பாணியில் எச்சரிக்கை செய்தார். பின்னர் ஹெல்மெட் வந்தபிறகு சர்பராஸ் கான் பீல்டிங் செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com