ரோகித், சூர்யகுமார் அதிரடி... 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி


ரோகித், சூர்யகுமார் அதிரடி... 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி
x

மும்பை அணி 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 177 ரன்கள் குவித்தது.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் ராகுல் திரிபாதிக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே அறிமுக வீரராக இடம் பிடித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா - ஷேக் ரஷீத் களமிறங்கினர். இதில் ரச்சின் ரவீந்திரா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

அடுத்து வந்த அறிமுக வீரரான ஆயுஷ் மாத்ரே ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர் வெறும் 15 பந்துகளில் 32 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே ஷேக் ரசீத் 19 ரன்களில் நடையை கட்டினார். அந்த சமயத்தில் சென்னை அணி 63 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த ஜடேஜா - ஷிவம் துபே சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை முன்னெடுத்து சென்றனர். முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியில் களமிறங்கியது. 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஷிவம் துபே 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முன்னதாக 37 ரன்களில் இருந்தபோது ஷிவம் துபே கொடுத்த கேட்சை தவற விட்ட பும்ரா, அவரின் விக்கெட்டை கைப்பற்றி பரிகாரம் தேடி கொண்டார். அடுத்து வந்த தோனி 4 ரன்களில் ஏமாற்றினார். இருப்பினும் ஜடேஜா இறுதி வரை களத்தில் இருந்து சென்னை அணி சவாலான இலக்கை எட்ட உதவினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் அடித்துள்ளது. ஜடேஜா 53 ரன்களுடனும், ஓவர்டான் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக ரயான் ரிக்கெல்டன் - ரோகித் சர்மா களமிறங்கினர். நிதானமாக ஆடிய ரயான் ரிக்கெல்டன், 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில், கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இதையடுத்து சூர்யகுமார் யாதவுடன், ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர். அஸ்வின் வீசிய 12-வது ஓவரில் ரோகித் சர்மா(33 பந்துகள், 50 ரன்கள்), இந்த சீசனில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ், 15-வது ஓவரில் அரைசதம் கடந்தார்.

இறுதியில் மும்பை அணி 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 177 ரன்கள் குவித்தது. இதன் மூலம் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா (76 ரன்கள், 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்), மற்றும் சூர்யகுமார் யாதவ் (68 ரன்கள், 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

1 More update

Next Story