

பெங்களூரு,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், விராட் கோலி களமிறங்கினர். கோலி 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த தேவ்தத் படிக்கலுடன் ஜோடி சேர்ந்த பில்ப் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிலிப் சால்ட் 30 பந்துகளில் 46 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் ரஜத் படிதர், படிக்கல் உடன் ஜோடி சேர்ந்து சென்னை பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
படிக்கல் 29 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர், வந்த டிம் டேவிட் கேப்டன் படிதர் உடன் ஜோடி சேர்ந்து ருத்ர தாண்டவம் ஆடினார்.
பெங்களூரு கேப்டன் படிதர் 19 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 48 ரன்கள் குவித்தார். அதேபோல், ருத்ரதாண்டவம் ஆடிய டிம் டேவிட் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 70 ரன்கள் குவித்து இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் பெங்களூரு 20 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. சென்னை தரப்பில் அன்ஜுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், ஷிவம் துபே தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 251 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சென்னை தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் , சஞ்சு சாம்சன் களமிறங்கினர். ருதுராஜ் 7 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆயுஷ் மாத்ரே 1 ரன்னில் அவுட் ஆனார். சஞ்சு சாம்சன் 9 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சர்பிராஸ் கான் 25 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அவுட் ஆனார். கார்த்திக் சர்மா 6 ரன்னிலும், ஷிவம் துபே 18 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் களமிறங்கிய பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரசாந்த் வீர் 29 பந்துகளில் 43 ரன்களிலும், ஓவர்டன் 16 பந்துகளில் 37 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் சென்னை 19.4 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் படுதோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் 3 ஆட்டங்களில் ஆடி 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் (10வது இடம்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.