

துபாய்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தி பதிலடி கொடுத்தது. பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்களில்) சென்னை அணி 24 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (88 ரன்கள், 58 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை நிலைத்து நின்று ஆடி சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 156 ரன்களை எட்ட உதவியதுடன் ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா (26 ரன்), வெய்ன் பிராவோ (23 ரன்கள், 8 பந்து, 3 சிக்சர்) அவருக்கு பக்கபலமாக இருந்தனர். அடுத்து ஆடிய மும்பை அணி 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்து பணிந்தது.
வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறுகையில், நாங்கள் ஒரு கட்டத்தில் 30 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தோம். அதில் இருந்து மீண்டு கவுரவமான ஸ்கோரை எட்ட வேண்டும் என்று நினைத்தோம். ருதுராஜ், பிராவோ சிறப்பாக செயல்பட்டு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக ரன்கள் எடுக்க வழிவகுத்தனர். நாங்கள் 140 ரன்கள் எடுப்போம் என்று நினைத்தோம். ஆனால் 160 ரன்களை (156 ரன்கள்) நெருங்கியது மிகப்பெரியதாகும். நாங்கள் புத்திசாலித்தனமாக பேட்டிங் செய்ததுடன் சூப்பராக நிறைவு செய்தோம். கடைசி வரை ஒரு பேட்ஸ்மேன் (ருதுராஜ்) நிலைத்து நின்று விளையாடியது விவேகமானதாகும் என்றார்.