சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்?


சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்?
x

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

மும்பை,

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னராக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர். தந்தையை போலவே கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட அர்ஜுன், சிறு வயது முதலே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 25 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் என ஆல்ரவுண்டராக உள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர். தந்தையை போல கிரிக்கெட்டில் பெரும் சாதனை படைப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இருந்தாலும் அர்ஜுன் டெண்டுல்கரின் ஆட்டம் தற்போது வரை பெரிதாக கவனம் ஈர்க்கும் வகையில் இல்லை. கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது தனது வாழ்க்கையில் புதிய இன்னிங்ஸை தொடங்க ஆயத்தமாகிவிட்டதாக தெரிகிறது. அதாவது, அர்ஜுன் டெண்டுல்கருக்கும் சானியா சந்தோக் என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் இரு வீட்டினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். எனினும், நிச்சயதார்த்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சானியா சந்தோக் பிரபல தொழில் அதிபரின் மகள் என்றும் இவர் பாவ்ஸ் பெட் ஸ்பா மற்றும் ஸ்டோர் எல்.எல்.பி நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

1 More update

Next Story