சாய் சுதர்சன் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் இது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அத்துடன் ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்கள் இல்லாமல் இந்திய அணி எப்படி விளையாட போகிறது? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. மேலும் அவர்களின் இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியை ஜஸ்பிரித் பும்ரா முன்னின்று வழிநடத்த உள்ளார்.

மேலும், இளம் வீரரான சாய் சுதர்சன், கருண் நாயர் உள்ளிட்டோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில், புதிய இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சாய் சுதர்சனுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன்.

ஜெய்ஸ்வாலுடன் கே.எல் ராகுலை தொடக்க வீரராக களமிறக்காமல் சாய் சுதர்சனை களமிறக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் தற்போது மிகச் சிறப்பான பேட்டிங் பார்மில் உள்ளார். அதுமட்டும் இன்றி அவருடைய பேட்டிங் டெக்னிக் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்க்கு ஏதுவாக இருக்கும். அதேபோன்று கே.எல். ராகுல் அல்லது கருண் நாயர் போன்ற வீரர்களில் ஒருவர் மூன்றாவது இடத்தில் விளையாடலாம்.

கே.எல். ராகுலை பொருத்தவரை அவர் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த வீரர். இதனால் அவர் நடு வரிசையில் விளையாடினால் இந்திய அணிக்கு உறுதி தன்மை கிடைக்கும். எனவே சாய் சுதர்சனை தொடக்க வீரராகவும், கே.எல். ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கினால் அது இந்திய அணிக்கு நல்லது என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com