

ஆமதாபாத்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறிவிட்டன. மீதமுள்ள ஒரு 'பிளே-ஆப்' இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் ஆமதாபாத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு அரங்கேறிய 66-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், குஜராத் டைட்டன்சும் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி குஜராத் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பில் முதலாவதாக சாய் சுதர்ஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ரன்கள் குவித்த தொடங்கிய இந்த ஜோடி, அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தியது. இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 23 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்ஷன் 35 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இந்த நிலையில் அதிரடி காட்டி வந்த சுப்மன் கில் 64 (37) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக சாய் சுதர்ஷனுடன், ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். வேகமாக ரன்கள் சேர்த்துக்கொண்டிருந்த இந்த ஜோடியில் சாய் சுதர்ஷன் 84 (53) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தேவாட்டியா (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மறுமுனையில் அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 23 பந்துகளில் அரை சதம் விளாசினார். அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 7 (3) ரன்னில் கேட்ச் ஆனார்.
இறுதியில் ஜோஸ் பட்லர் 57 (27) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் ஸ்பென்சர் ஜான்சர், கம்போஜ், முகேஷ் சவுத்ரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.