சாய் சுதர்சனை நீக்கியது நியாயமற்றது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து

கோப்புப்படம்
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய பிளேயிங் லெவனில் இடம் பிடித்த இளம் வீரரான சாய் சுதர்சன் அதன் பின் நடந்த 2 ஆட்டங்களில் இடம் பெறவில்லை.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பா அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, கடந்த டெஸ்டில் அணித் தேர்வு சுவாரசியமாக இருந்தது. ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. வெற்றி பெற்று விட்டோம் என்பதற்காக சில முடிவுகளை ஏற்க முடியாது.
சாய் சுதர்சனுக்கு ஒரு போட்டியில் வாய்ப்பு அளித்து விட்டு வெளியே உட்கார வைத்து விட்டனர். இளம் வீரரான அவரை எதிர்காலத்திற்கான வீரராக நாம் பார்க்கிறோம். முதலாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் அவர் (30 ரன்) ஓரளவு நன்றாக ஆடினார். எனவே 2-வது டெஸ்டில் அவருடன் இந்திய அணி களம் இறங்கி இருக்க வேண்டும்.
அவர் 3-வது வரிசையில் ஆடுவதற்கு பொருத்தமானவர். கருண் நாயர் 3-வது வரிசையில் விளையாடக் கூடிய வீரர் கிடையாது. ஒரு டெஸ்ட் போட்டிக்கு பிறகு சாய் சுதர்சனை கழற்றி விட்டது நியாயமற்றது. ஒரு டெஸ்டுக்கு பிறகு அனைவரும் பெரிய சதங்கள் எடுக்கின்றனர். எனவே சாய் சுதர்சனுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர். இவ்வாறு அவர் கூறினார்






