உலக கோப்பை போட்டி வரை சர்ப்ராஸ் அகமது கேப்டனாக நீடிப்பார் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

உலக கோப்பை போட்டி வரை பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ப்ராஸ் அகமது நீடிப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
உலக கோப்பை போட்டி வரை சர்ப்ராஸ் அகமது கேப்டனாக நீடிப்பார் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
Published on

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே டர்பனில் கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6-வது விக்கெட்டுக்கு வான்டெர் துஸ்சென், பெலக்வாயோ ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

பெலக்வாயோ பேட்டிங் செய்கையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது அவரை நோக்கி கருப்பு வீரரே என்று பேசியது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாகி இனவெறி சர்ச்சையாக வெடித்தது. நடந்த சம்பவத்துக்காக சர்ப்ராஸ் அகமது மன்னிப்பு கேட்டார். யாரையும் புண்படுத்தும் நோக்கில் நான் பேசவில்லை. ஆட்டத்தின் போக்கு காரணமாக விரக்தியில் பேசிவிட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சர்ப்ராஸ் அகமது 4 ஆட்டங்களில் விளையாட தடைவிதித்தது. இதனால் அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது மற்றும் 5 ஒருநாள் போட்டி மற்றும் அந்த அணிக்கு எதிரான முதல் இரண்டு 20 ஓவர் போட்டியிலும் விளையாடவில்லை. தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. தடை முடிந்து விட்டாலும் சர்ப்ராஸ் அகமது இந்த ஆட்டத்தில் ஆடவில்லை.

சர்ச்சையில் சிக்கியதும் சர்ப்ராஸ் அகமதுவை நாடு திரும்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டதால் அவர் கடைசி 20 ஓவர் போட்டியில் ஆடவில்லை. சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை கவனித்து வருகிறார். சர்ப்ராஸ் அகமதுவுக்கு மீண்டும் கேப்டன் பதவி கிடைப்பது கடினம் என்று பேச்சுகள் கிளம்பி இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் இசான் மணி லாகூரில் நேற்று அளித்த பேட்டியில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவி குறித்து மீடியாக்களில் பல்வேறு யூகங்கள் கிளம்பின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெறும் உலக கோப்பை போட்டி வரை சர்ப்ராஸ் அகமது கேப்டனாக நீடிப்பார் என்பதை உறுதிப்படுத்துகிறேன். அடுத்த முடிவு எடுக்கப்படும் வரை அவர் எங்கள் அணியின் கேப்டனாக தொடருவார். சர்ப்ராஸ் அகமது சிறந்த கேப்டன் என்பதை ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார். 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் போட்டியில் அணிக்கு தலைமை தாங்கி வெற்றி தேடிக்கொடுத்தார். 20 ஓவர் போட்டியில் உலக தரவரிசையில் பாகிஸ்தான் அணி முதலிடத்தை பிடிக்க வைத்தார் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com