

சிட்னி,
இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதனை அடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் வருகிற 17-ந் தேதி பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.
இந்த நிலையில் 2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இருந்து விலகி இருக்கிறார். காயத்தால் 2-வது பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத ஆல்-ரவுண்டர் மோசஸ் ஹென்ரிக்ஸ் உடல் தகுதியை எட்டி இருப்பதை தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார். ஹென்ரிக்ஸ் 4 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். கடைசியாக அவர் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கொழும்பில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்று இருந்தார்.
இந்திய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்திய சீன் அப்போட் சிட்னியில் தங்கி இருந்து காயத்துக்கு சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹென்ரிக்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நேற்று அடிலெய்டு புறப்பட்டு சென்றனர். மெல்போர்னில் 26-ந் தேதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு சீன் அப்போட் உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி ஆகியோர் முதல் டெஸ்டில் ஆடவில்லை. மார்கஸ் ஹாரில் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டு இருந்தார். அத்துடன் உறவினருக்கு உடல் நலக்குறைவு காரணமாக அணியில் இருந்து விலகிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் அணியினருடன் இணைந்துள்ளார்.