பாகிஸ்தான் அணியில் மூத்த வீரர்களை நீக்க வேண்டும் - அப்ரிடி

பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணியில்  மூத்த வீரர்களை நீக்க வேண்டும் - அப்ரிடி
Published on

இஸ்லாமாபாத்,

டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. கொழும்புவில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் 18 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி, பாகிஸ்தான் அணிக்கு டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் தோல்வி தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கூறுகையில்,

'ஷகீன் ஷா அப்ரிடி, பாபர் அசாம், ஷதப் கான் போன்ற மூத்த வீரர்களை நீக்குங்கள். நமிபியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்துக்கு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். இது அவர்கள் நம்பிக்கை பெற வாய்ப்பாக அமையும்.

அசாம், ஷதப் கான், அப்ரிடி உள்ளிட்டோர் நீண்ட காலமாக விளையாடி வருகிறார்கள். சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கும் போதெல்லாம் சொதப்பி விடுகிறார்கள். மூத்த வீரர்கள் நாம் விரும்பும் ஆட்டத்தை தர வில்லை என்றால் வெளியில் இருக்கும் ஜூனியர் வீரர்களை விளையாட வைப்பதே நல்லது. அதனால் என்ன வித்தியாசம் ஏற்பட்டு விடப்போகிறது என்றார்.

வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி, முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடியின் மகளை திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com