வேகப்பந்து வீச்சாளர் விலகல்... ஐதராபாத் அணிக்கு பின்னடைவு

பேட் கம்மின்ஸ் விரைவில் அணியுடன் இணையவுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் விலகல்... ஐதராபாத் அணிக்கு பின்னடைவு
Published on

ஐதராபாத்,

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்கு ஒரு பின்னடைவும், ஒரு மகிழ்ச்சியான செய்தியும் கிடைத்துள்ளன.

சன்ரைசர்ஸ் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டேவிட் பெயின், கணுக்கால் காயம் காரணமாக இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். சீசன் தொடங்கும் முன் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் ஜாக் எட்வர்ட்ஸிற்குப் பதிலாக பெயின் அணியில் சேர்க்கப்பட்டார்.

பிக் பாஷ் லீக் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட பெயின், ஐ.பி.எல் தொடரில் விளையாடிய 2 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது எகானமி ரேட் 14-ஆக இருந்த நிலையில், தற்போது காயத்தால் விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தற்போது இஷான் கிஷன் தலைமையில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் அணி, விளையாடிய 5 போட்டிகளில் கிடைத்துள்ள வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பலமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. சன்ரைசர்ஸ் தனது அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐதராபாத்தில் எதிர்கொள்கிறது.

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த பேட் கம்மின்ஸ், தற்போது உடற்தகுதித் தேர்வில் (Fitness Test) வெற்றி பெற்றுள்ளார். அவர் விரைவில் அணியுடன் இணையவுள்ளார்.

ஏப்ரல் 25-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸ் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய பந்துவீச்சாளர் விலகினாலும், கம்மின்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்புவது சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com