ஐபிஎல் மீது பாக்.அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி குற்றச்சாட்டு

இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் வர மறுப்பதற்கு ஐபிஎல் தான் காரணம் என்று அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஐபிஎல் மீது பாக்.அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி குற்றச்சாட்டு
Published on

இஸ்லமாபாத்,

2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடியது. அப்போது இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சில வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி, 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த தொடரில் பாதுகாப்பு கருதி பங்கேற்க விரும்பவில்லை என்று இலங்கை டி20 அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா, தனஞ்செய டிசில்வா, அகிலா தனஞ்செயா, லக்மல், சண்டிமல், டிக்வெல்லா, குசால் பெரேரா, கருணாரத்னே ஆகிய 10 வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் இல்லாமல் லஹிரு திரிமன்னா, துஷான் ஷனகா தலைமையிலான ஒருநாள் மற்றும் டி20 அணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதற்கிடையே, பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்தது. இதனால், இந்தத் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும் திட்டமிட்டபடி, இலங்கை அணி பாகிஸ்தானில் நடக்கும் போட்டியில் பங்கேற்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க இலங்கையின் முன்னணி வீரர்கள் மறுப்பு தெரிவித்ததற்கு ஐபிஎல் நிர்வாகமே காரணம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்றால் அவர்களுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட ஒப்பந்தம் அளிக்கப்படாது என்று ஐபிஎல் நிர்வாகம் மிரட்டியுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் பீரிமியர் லீக் தொடரில் (PSL) இலங்கை வீரர்கள் பங்கேற்க வைப்பது தொடர்பாக நான், கடந்த முறை அந்த நாட்டு வீரர்களிடம் பேசினேன். அப்போது, பிஎஸ்எல் தொடரில் விளையாட அவர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால், பாகிஸ்தான் சென்றால் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டியுள்ளனர்.

எனவே, இலங்கை கிரிக்கெட் வாரியம், தனது நாட்டு வீரர்களுக்கு பாகிஸ்தான் வர அழுத்தம் கொடுக்க வேண்டும். பாகிஸ்தான் வந்து விளையாடும் இலங்கை வீரர்கள் வரலாற்றில் நினைவுகூரப்படுவார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com