

துபாய்,
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர், இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணியும் இலங்கை அணியும் மோதின. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில், வங்காளதேச அணி வெற்றி பெற்றது. முன்னதாக ஆட்டத்தின் கடைசி ஓவரில், இலங்கை பந்து வீச்சாளர் நோ பால் வீசியதாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, இலங்கை வீரர்களுக்கும் வங்காளதேச பேட்ஸ்மேன்களுக்கும் மோதல் ஏற்பட்டது. மேலும் தண்ணீர் கொடுக்க வந்த வங்கதேச வீரர் இலங்கை கேப்டனிடம் ஏதோ கூறியதாக மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பின்னர், நடுவர்களுடன் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹாசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஐசிசி நடத்தை விதிமுறைகளை மீறியதாக வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹாசன் மற்றும் நூருல் ஹாசன் ஆகியோருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இருவருக்கு எதிராகவும் நிலை 1 டிமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.