ஷமர் ஜோசப், இப்ராகிம் ஜட்ரான் அசத்தல்: எம்.ஐ. எமிரேட்ஸ் அணியை வீழ்த்திய கல்ப் ஜெயன்ட்ஸ்!

கல்ப் ஜெயன்ட்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷமர் ஜோசப், இப்ராகிம் ஜட்ரான் அசத்தல்:  எம்.ஐ. எமிரேட்ஸ் அணியை வீழ்த்திய கல்ப் ஜெயன்ட்ஸ்!
Published on: 

ஐ.எல்.டி20 கிரிக்கெட் தொடரில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் கல்ப் ஜெயன்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எம்.ஐ. எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த எம்.ஐ. எமிரேட்ஸ் அணி, கல்ப் ஜெயன்ட்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கல்ப் ஜெயன்ட்ஸ்

கல்ப் ஜெயன்ட்ஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 3 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். டேவிட் வைஸ் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அல்சாரி ஜோசப் ஒரு விக்கெட் எடுத்தார். இதனால் எம்.ஐ. எமிரேட்ஸ் அணி குறைந்த ரன்களில் சுருண்டது.

பின்னர் 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கல்ப் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் இப்ராகிம் ஜட்ரான் பொறுப்புடன் விளையாடி 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். ஹென்ரிச் கிளாசென் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் கல்ப் ஜெயன்ட்ஸ் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடர்ந்து 2-வது அரைசதம் அடித்த இப்ராகிம் ஜட்ரான் ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆட்டநாயகன் விருது 3 விக்கெட் வீழ்த்திய ஷமர் ஜோசப்புக்கு வழங்கப்பட்டது

X