2018-ம் ஆண்டே ஷமி ஓய்வு முடிவை எடுத்து விட்டார்.. ஆனால்... - இந்திய முன்னாள் பயிற்சியாளர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

image courtesy:PTI
முகமது ஷமி இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளூர் போட்டிகளில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் குணமடைந்த அவர் உள்ளூர் தொடர்களில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுத்தார். பின்னர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார். இருப்பினும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
தற்போது இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளூர் போட்டிகளில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக கருதப்பட்ட அவருக்கு காயம் பெரிய சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அதுபோக தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் பல இன்னல்களை சந்தித்துள்ளார். இருப்பினும் அதையெல்லாம் தாண்டி இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க போராடி வருகிறார்.
இந்நிலையில் முகமது ஷமி கடந்த 2018-ஆம் ஆண்டே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று முடிவு எடுத்ததாக இந்திய முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இருப்பினும் ஷமியின் அந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தடுத்து நிறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “2018-ல், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி (பெங்களூருவில்) நடந்தது. அந்த போட்டிக்கான உடற்தகுதி தேர்வில் ஷமி தோல்வியடைந்து, அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மிகவும் மனமுடைந்திருந்தார். அந்த சமயத்தில் அவரது தனிப்பட்ட பிரச்சினைகளும் உச்சத்தில் இருந்தன.
இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் என் அறைக்கு வந்து, ‘பாஜி, (பரத் அருண்) நான் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் ஓய்வை அறிவிக்கப்போகிறேன்’ என்றார். அதற்கு நான் அவரிடம், ‘கிரிக்கெட்டை விட்ட பிறகு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் இன்று இருக்கும் இடம், நீங்கள் சாதித்தவை அனைத்தும் கிரிக்கெட்டால்தான். எனவே அதை விட்டு விடாதே" என்று சொன்னேன். அவர் கோபமாக இருப்பதாகக் கூறினார்.
உடனே நான் அவரை ரவி சாஸ்திரியிடம் அழைத்துச் சென்றேன். ரவி சாஸ்திரி அவரிடம், ‘உனக்கு என்ன பிரச்சினையாக இருந்தாலும் சரி அதை மனதில் வைத்துக் கொள்ளாதே கையில் இருக்கும் பந்தின் மூலம் உன் கோபத்தை காட்டு. உங்கள் உடல் தகுதியில்லை என்று கிரிக்கெட்டை விட விரும்புகிறீர்களா?’ என்று கேட்டார். அதோடு நாங்கள் அவரை என்சிஏ-க்கு அனுப்பினோம். அங்கு உடல் தகுதியில் மட்டும் பணியாற்ற வேண்டும், பந்து வீசக்கூடாது என்று சாஸ்திரி அறிவுறுத்தினார்.
மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவர் என்னை அழைத்து, ‘பாஜி, நான் இப்போது குதிரை போல ஓடுகிறேன்’ என்றார். அப்படித்தான் முகமது ஷமி தனது நம்பிக்கையை மீண்டும் பெற்றார், பின்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடினார். ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், கடைசி நாள் தேநீர் இடைவேளைக்கு பிறகு, அவர் 140 கிமீ வேகத்தில் ஒரு அற்புதமான ஸ்பெல் வீசினார். அது அவரது உடல் தகுதியின் அளவைக் காட்டியது. அது ஆச்சரியமாக இருந்தது” என்று கூறினார்.






