

மெல்போர்ன்,
ஷேன் வார்னே மறைவால் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் இருப்பதாக வார்னேவின் மேனேஜர் ஜேம்ஸ் எர்ஸ்கின் தெரிவித்தார்.
இந்த செய்தியை கேட்ட பின்னர் அவருடைய 3 குழந்தைகளும் உருக்குலைந்து போய் உள்ளனர் என்று கூறினார். வார்னேவின் குழந்தைகளான ஜேக்சன், சம்மர் மற்றும் புரூக் மிகுந்த வேதனையில் உள்ளனர். முன்னதாக அவர் தனது மனைவி சிம்மோன் கலாஹனை 2005ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
அவருடைய தந்தை கெய்த் ஒரு தைரியமான மனிதராக வலம் வந்தவர். ஆனால் வர்னேவின் மறைவை அறிந்தது அவரால் அந்த இழப்பை தாங்கி கொள்ள முடியவில்லை என்று வார்னேவின் நட்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அவருடைய உடலை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. வார்னே முதன்முதலாக 1992ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.