

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை வீரர் ஷிகர் தவான் (வயது 36). இவரது மகன் ஜொராவர். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு தவானின் மகன் சென்றார். இதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு மற்றும் விமான சேவை ரத்து ஆகியவற்றால் இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்பு தள்ளி போனது. அதனுடன், தவான் விளையாட்டில் மும்முரம் காட்டினார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்து, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று தவானும், இந்திய அணியில் விளையாடாமல் உள்ளார். இந்த நிலையில், தனது மகனை 2 ஆண்டுகள் கழித்து தவான் சந்தித்து உள்ளார்.
இதுபற்றிய உணர்ச்சிகர வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இதனை 5.7 லட்சத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர். அவர் குறைந்தது ஒரு மாதம் வரை விளையாட்டில் இருந்து ஒதுங்கி இருப்பார். இதனால், தனது மகனுடன் அதிக நேரம் செலவிட முடியும்.
சமீபத்தில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் கொரோனா பாதித்த தவான் முதல் 2 போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனினும் குணமடைந்த பின்பு 3வது போட்டியில் விளையாடினார்.
இதேபோன்று சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக, ரூ.8.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தவான் அணிக்கு மீண்டும் கேப்டனாக கூடும் என்றும் கூறப்படுகிறது.