சூதாட்டத்தில் ஈடுபட்டதால்தான் சோயிப் மாலிக்கின் பிபிஎல் ஒப்பந்தம் ரத்தா? வெளியான பரபரப்பு தகவல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் சமீபத்தில் நடிகை சனா ஜாவித்தை 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

டாக்கா,

வங்காளதேச பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடரில் பார்ச்சூன் பாரிஷல் அணிக்காக களமிறங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், ஹாட்ரிக் நோ-பால் வீசியதால் மேட்ச் பிக்சிங் எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா என்ற சர்ச்சை எழுந்தது. இதனால் அவரது பிபிஎல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

அண்மையில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் சானியா மிர்சாவை விவாகரத்து செய்த சோயிப் மாலிக், உடனடியாக நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார். சானியா மிர்சாவின் விவாகரத்திற்கு சோயிப் மாலிக்கின் திருமணத்தை மீறிய உறவே காரணம் என்று கூறப்பட்டு வந்தது.  3வது திருமணத்தால் அவர் மீது அதிகளவில் கவனம் குவிந்தது.

இந்த நிலையில் திருமணம் செய்த உடன், நேரடியாக வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றார். பார்ச்சூன் பாரிஷல் அணிக்காக விளையாடி வரும் அவர், குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங் செய்தபோது சர்ச்சையில் சிக்கினார்.

அந்த போட்டியில் சோயிப் மாலிக் ஒரே ஓவரில் 3 நோ-பால் வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் டெத் ஓவரில் பேட்டிங் செய்தபோது 6 பந்துகளில் வெறும் 5 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் கிரிக்கெட் ரசிகர்களிடையே சோயிப் மாலிக் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டாரா என்ற விவாதம் தொடங்கியது. இதனால் பலரும் சோயிப் மாலிக்கை தீவிரமாக விமர்சிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் பார்ச்சூன் பாரிஷல் அணி சோயிப் மாலிக் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக அறிவித்தது. இவருக்கு பதிலாக அகமத் ஷேசாத்தை அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் காரணமாக இவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால்தான் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பார்ச்சூன் பாரிஷல் அணியின் உரிமையாளர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக சோயிப் மாலிக்கைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டு வருகிறோம். அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். அவர் ஒரு நல்ல வீரர். அவர் எங்கள் அணிக்காக சிறந்ததைக் கொடுத்தார். எனவே நாங்கள் அதைப் பற்றி மேலும் விவாதிக்க விரும்பவில்லை. சோயிப் மாலிக் பிப்ரவரி 14 வரை எங்கள் அணியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் குல்னா டைகர்சுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு துபாய்க்குச் சென்றார்.

பின்னர் அவர் பிப்ரவரி 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்குமாறு என்னிடம் கேட்டார். ஆனால் எங்களுக்கு அதற்கு முன் முக்கிய ஆட்டங்கள் இருப்பதால்தான் அவரின் ஒப்பந்தத்தை ரத்து செய்தோம். அவருக்கு பதிலாக அகமத் ஷேசாத்தை ஒப்பந்தம் செய்தோம். ஆனால் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் காரணமாக அவரது ஒப்பந்தத்தை நாங்கள் நிறுத்தினோம் போன்ற ஊடகங்களில் வரும் அனைத்து விஷயங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com