ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலிய மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் அனுமதி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலிய மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் அனுமதி
Published on

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது. வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடி சென்று அற்புதமாக பிடித்தார். ஆனால் பந்தை பிடித்த பின் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அதில் அவருக்கு இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.

இதனால் வலியால் துடித்த அவர் சிகிச்சைக்காக பெவிலியன் அழைத்து செல்லப்பட்டார். அதன்பின் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் காயத்தின் தன்மை குறித்து ரசிகர்களிடையே கலக்கம் ஏற்பட்டது.

இதனிடையே அவரது காயம் குறித்து பி.சி.சி.ஐ., ஸ்ரேயாஸ் ஐயரின் இடது விலா எலும்பில் பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. அவரது காயம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று அந்த போட்டியின்போது தெரிவித்தது.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையின் ஐசியூ-வில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரின் உடலுக்குள் ரத்தக்கசிவு இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com