விஜய் ஹசாரே கோப்பை: மும்பை அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்

பயிற்சியின்போது ஷர்துல் தாக்கூருக்கு காயம் ஏற்பட்டது.
மும்பை,
33வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதி வருகின்றன.
அந்த வகையில் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஷர்துல் தாக்கூர் செயல்பட்டு வந்தார். ஆனால், பயிற்சியின்போது ஷர்துல் தாக்கூருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து நடப்பு விஜய் ஹசாரே தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் ஷர்துல் தாக்கூர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷர்துல் தாக்கூர் விலக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.






