சதம் விளாசிய சுப்மன் கில்... வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
Image Courtesy : @BCCI
Image Courtesy : @BCCI
Published on

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தில் முதல் ஓவரை வீசிய முகமது சமி, சவுமியா சர்காரை காலி செய்தார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 2-வது ஓவரை வீசிய ஹர்சித் ராணா, கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவை அவுட்டாக்கினர். சிறிது நேரம் நிலைத்த டான்சித் ஹசன்(25) அக்சரின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கே.எல் ராகுலிடம் பிடிபட்டார்.

மெஹதி ஹசன் மிராஸ், அனுபவ வீரர் முஷ்பிகூர் ரகீமும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

அந்த சமயத்தில் தவுஹித் ஹிரிடோய் - ஜேக்கர் அலி இருவரும் ஜோடி சேர்ந்தனர். தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்து அசத்தியது. நிதானமாக விளையாடி அரைசதம் அடித்த ஜேக்கர் அலி, 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் தனது சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹிரிடாய், 114 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் சதமடித்து அசத்தினார். இறுதியில் வங்காளதேச அணி, 49.4 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் முகமது சமி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா-சுப்மன் கில் களமிறங்கினர்.

இதில் ரோகித் சர்மா 41 ரன்களில் கேட்ச் ஆன நிலையில், அடுத்த விக்கெட்டுக்கு விராட் கோலி களமிறங்கினார். அவர் 22 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 15 ரன்களிலும், அக்சர் பட்டேல் 8 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடி சதம் விளாசிய சுப்மன் கில் 101 ரன்களும், கே.என்.ராகுல் 41 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com