

சியோல்,
கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியன் நோஜோமி ஒகுஹரா வை (ஜப்பான்) எதிர்க்கொண்டார். இறுதிப்போட்டியில் பி.வி.சிந்துநோஜோமி ஒகுஹரா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து, ஒகுஹராவிடம் போராடி தோல்வி கண்டு இருந்தார். எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்ககூடியதாகவே பார்க்கப்பட்டது. இன்றைய போட்டி தொடங்கியதுமே விளையாட்டில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது.
முதல்செட்டில் இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், இருப்பினும் சிந்து 22-20 என்ற கணக்கில் செட்டை தனதாக்கினார். இரண்டாவது செட் இந்திய வீரர்களுக்கு பெரிதும் அதிர்ச்சியளிக்கும் விதமாக மாறியது. செட் தொடங்கியதுமே ஒகுஹரா ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். சிந்துவை தன்னை நெருங்க முடியாத வகையில் பார்த்துக் கொண்டார். ஆட்டம் மிகவும் எளிதாக ஒகுஹராவின் வசம் சென்றது. பிவி சிந்து 11-21 என்ற கணக்கில் செட்டை ஒகுஹராவிடம் கொடுத்துவிட்டார். இதனையடுத்து ஆட்டம் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டிற்கு நகர்ந்தது.
மூன்றாவது செட்டில் பிவி சிந்து சிறப்பான ஆட்டத்தை தொடக்கம் முதலே வெளிப்படுத்தினார். ஜப்பான் வீராங்கனை ஒகுஹராவும் விட்டுக்கொடுக்கவில்லை, போராடினார். ஆனால் 2-வது செட்டில் எப்படி ஒகுஹரா நகர்ந்தாரோ, அதேபோன்று பிவி சிந்து ஆதிக்கம் செலுத்தினார். செட்டை 21-18 என்ற கணக்கில் வென்று பட்டத்தை தட்டி சென்றார் பிவி சிந்து. பிவி சிந்து வெல்லும் மூன்றாவது சூப்பர் சீரிஸ் பட்டம் இதுவாகும். பிவி சிந்துவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உலக சாம்பிய போட்டியில் போராடி கிடைத்த தோல்விக்கு பிவி சிந்து, ஒகுஹராவை பழி வாங்கிக்கொண்டார்.