பந்து வீச ஓடி வந்த சிராஜ்.. தடுத்த ஜாக் கிராலி.. அடுத்து நடந்த சம்பவம்


பந்து வீச ஓடி வந்த சிராஜ்.. தடுத்த ஜாக் கிராலி.. அடுத்து நடந்த சம்பவம்
x
தினத்தந்தி 24 Jun 2025 8:02 PM IST (Updated: 24 Jun 2025 9:25 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் 5-வது நாளில் இந்த சம்பவம் நடந்தது.

லீட்ஸ்,

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல் (137 ரன்கள்), ரிஷப் பண்ட் (118 ரன்கள்) ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 96 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு, பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்திருந்தது. ஜாக் கிராலி 12 ரன்னுடனும், பென் டக்கெட் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. ஜாக் கிராலி ஒருபுறம் நிதானமாக ஆட, மறுமுனையில் டக்கெட் வேகமாக ரன் குவித்தார்.

பென் டக்கெட் சதமும், ஜாக் கிராலி அரைசதமும் அடித்து அசத்தினர். கிராலி 65 ரன்களில் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆலி போப் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது ஜோ ரூட் - பென் டக்கெட் கூட்டணி பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக இந்த நாளின் உணவு இடைவேளைக்கு முன்பாக கடைசி ஓவரை (30-வது ஓவர்) சிராஜ் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை சிராஜ் வீச ஓடி வந்தபோது கடைசி நேரத்தில் அந்த பந்தை சந்திக்க தயாராக இருந்த பேட்ஸ்மேன் கிராலி விலகினார். இதனால் முழு முயற்சியுடன் ஓடி வந்த சிராஜ் பந்துவீச்சை முடிக்காமல் நிறுத்தினார்.

இதனால் கடுப்படைந்த சிராஜ், கிராலியை முறைத்தார். அதற்கு மறுமுனையில் இருந்த பென் டக்கெட், சிராஜிடம் சில வார்த்தைகளை விட்டார். இதனால் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story