ஆறு படையப்பன் ரஜினி, ஏழு படையப்பன் தோனி; வைரலான பதிவு

தோனி துண்டை தோளில் போட்டு இறங்கி நடந்து வரும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, ‘படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸானது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த ‘படையப்பா’ படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதில், ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது, இந்த படம் நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. வெளிநாடுகளிலும் ரீ-ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர்.
ரஜினி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில் ‘படையப்பா’ படம் திரைக்கு வருகிறது . ‘படையப்பா’ திரைப்படம் 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில், ஆறு படையப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், எம்.எஸ். தோனியை ஏழு படையப்பன் என பெயரிட்டு, புகைப்படம் ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சி.எஸ்.கே.) எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து உள்ளது. அதில், ரஜினி துண்டை தோளில் போடுவது போன்று, தோனி துண்டை தோளில் போட்டு இறங்கி நடந்து வரும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. தோனியின் ராசியான எண் ஏழு. அதனை குறிக்கும் வகையில் ஏழு படையப்பன் என சி.எஸ்.கே. பெயரிட்டு உள்ளது.






