அப்படி அடிக்கப்படும் சிக்சர்களுக்கு 12 ரன்கள் கொடுக்க வேண்டும் - கெவின் பீட்டர்சன்

கிரிக்கெட்டில் பொழுதுபோக்கை அதிகரிக்க கெவின் பீட்டர்சன் இந்த ஐடியாவை கூறியுள்ளார்.
லண்டன்,
நவீன கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களை காட்டிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக வெள்ளைப்பந்து (டி20, ஒருநாள்) போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சர்வ சாதாரணமாக சிக்சர்களை பறக்கவிட்டு வருகின்றனர். இதனால் போட்டிகளில் ரன் குவிப்பு அதிகமாகி வருகிறது. முன்பெல்லாம் ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் அடிப்பதெல்லாம் கடினமாக தெரியும். ஆனால் தற்போதுள்ள புதிய விதிகளினால் 300+ ரன்கள் எளிதாக அடிக்கப்படுகின்றன. மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் சர்வ சாதரணமாக 200+ ரன்கள் அடிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கிரிக்கெட்டில் மேலும் பொழுதுபோக்கை அதிகரிக்க இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் புதிய ஐடியா ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி 100 மீட்டருக்கு மேல் அடிக்கப்படும் சிக்சர்களுக்கு 6 ரன்களுக்கு பதிலாக 12 ரன்கள் வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “முன்பு கூறியது போலவே மீண்டும் கூறுகிறேன். ஒரு பேட்ஸ்மேன் 100 மீட்டருக்கு மேல் சிக்சர் அடித்தால், ஸ்கோரில் 12 ரன்கள் சேர்க்கப்பட வேண்டும்!இதனால் நிறைய பேட்ஸ்மேன்கள் சிக்சர்கள் அடிக்க முயற்சி செய்வார்கள். அதனால் மேலும் பொழுதுபோக்கு அதிகரிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.






