இலங்கைக்கு எதிராக கடைசி போட்டி... கவுரவம் காக்க இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு

தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது.
இலங்கைக்கு எதிராக கடைசி போட்டி... கவுரவம் காக்க இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு
Published on

கொழும்பு,

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் 230 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. 2-வது ஆட்டத்தில் இலங்கை அணி 32 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில், வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவுக்கு பதிலாக சுழற்பந்து வீசக்கூடிய ரியான் பராக் களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.

இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இன்று களமிறங்குகிறது. அதே சமயம் 20 ஓவர் தொடரை இழந்த இலங்கை அணி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு தொடரை கைப்பற்றும் வேட்கையுடன் உள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, ஷிவம் துபே அல்லது ரியான் பராக், அக்சர் பட்டேல், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

இலங்கை: பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், சமரவிக்ரமா, சாரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியானகே, துனித் வெல்லாலகே, கமிந்து மென்டிஸ், அகிலா தனஞ்ஜெயா, ஜெப்ரி வன்டர்சே, அசிதா பெர்னாண்டோ.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com