கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கையை பந்தாடியது தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு அரங்கேறியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கையை பந்தாடியது தென்ஆப்பிரிக்கா
Published on

20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுக்கு 120 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் குசல் பெரேரா 39 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா, ஜோர்ன் பார்ச்சுன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் ஒரு விக்கெட் எடுத்ததோடு 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டினார்.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 14.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா, ஒரு அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் நொறுக்குவது இது 3-வது நிகழ்வாகும். தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டான் டி காக் 59 ரன்களும் (46 பந்து, 7 பவுண்டரி), ரீஜா ஹென்ரிக்ஸ் 56 ரன்களும் (42 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர். இவர்கள் கூட்டாக திரட்டிய 121 ரன்களே, இலங்கைக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா, விக்கெட் ஒன்றுக்கு எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். மேலும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக பதிவு செய்த 7-வது வெற்றியாக இது அமைந்தது. இதற்கு முன்பு அதிகபட்சமாக அந்த அணி 2009-ம் ஆண்டில் தொடர்ந்து 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது. அச்சாதனையை தற்போது சமன் செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com