சில நேரங்களில் வீரர்கள் கிரிக்கெட்டை விட பெரியவர்களாக பாவிக்கப்படுகின்றனர் - பிரவீன் குமார்

2011 உலகக்கோப்பை என்றாலே தோனிதான் அனைவருடைய மனதிலும் முதலாவதாக வந்து நிற்கிறார் என்று கவுதம் கம்பீர் விமர்சித்திருந்தார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

புதுடெல்லி,

2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இதில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆரம்பத்திலேயே சச்சின், சேவாக் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. அந்த ஆட்டத்தில் முன் வரிசையில் களமிறங்கிய தோனி, கம்பீருடன் சேர்ந்து அபார பார்ட்னர்ஷிப் அமைத்து சிக்சருடன் பினிஷிங் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதன் காரணமாக இறுதிப்போட்டியில் தோனி ஆட்டநாயகன் விருது வென்றார்.

அதனால் 2011 உலகக்கோப்பை என்றாலே தோனிதான் அனைவருடைய மனதிலும் முதலாவதாக வந்து நிற்கிறார். அதே காரணத்தால் தோனியை 2011 உலகக்கோப்பை ஹீரோவாகவும் பல இந்திய ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுகின்றனர். ஆனால் சச்சின் முதல் ஜாகீர் கான் வரை அனைவரும் சேர்ந்து உலகக்கோப்பையை வென்றுக் கொடுத்த நிலையில் தோனியை மட்டும் ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடுவதாக கவுதம் கம்பீர் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் அவருடைய கருத்தை வரவேற்று முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-"கம்பீர் பாய் மிகவும் சரியாக சொன்னார். இது மல்யுத்தம் போன்ற மற்ற விளையாட்டுகள் கிடையாது. கிரிக்கெட்டில் ஒரு வீரர் மட்டும் வெல்ல முடியாது. 2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகள் எடுத்து நிறைய ரன்கள் அடித்தார். ஜாகீர் கான் 21 விக்கெட்டுகள் எடுத்தார். கவுதம் கம்பீர் 2007, 2011 ஆகிய 2 தொடர்களின் பைனலிலும் ரன்கள் அடித்தார். தோனி 2011 பைனலில் ரன்கள் அடித்தார்.

பொதுவாக குறைந்தது 3 பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் இருந்து 2 பவுலர்கள் விக்கெட்டுகளை எடுத்தால்தான் ஒரு அணி வெல்லும். எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் ஒரு வீரர் தொடரை வெல்ல முடியாது. இருப்பினும் இந்திய கிரிக்கெட்டில் ஹீரோவாக கொண்டாடப்படும் கலாச்சாரம் இருக்கிறது. 1980 முதலே உள்ள இந்த கலாச்சாரம் தவறானது. சில நேரங்களில் வீரர்கள் கிரிக்கெட்டை விட பெரியவர்களாக பாவிக்கப்படுகின்றனர். குறிப்பாக அதிக பிராண்ட் சப்போர்ட் கொண்டவர்கள் அதிக வெளிச்சத்தை பெறுகின்றனர்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com