

டெல்லி,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா , இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்ற 34வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அலிஷன் அதிகபட்சமாக 45 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அந்த அணியின் கொர்பின் போஷ் அதிபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 13.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் டெவால்ட் பிரெவிஸ் 36 ரன்கள் குவித்தார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.