

சென்னை,
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவை “ முட்டாள் அணி” என விமர்சித்துள்ளார். இந்தியா கோப்பையை வெல்ல தென் ஆப்பிரிக்காவின் தவறான முடிவே காரணமாக இருந்ததாக அவர் கூறினார்.
சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றிருந்தால், இந்தியா அரையிறுதிக்கு வருவது மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார். இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறியிருக்கவும் கூடும் என்றும் அவர் கூறினார்.
அவர் பேசுகையில், “இந்த தொடரில் மிகப்பெரிய முட்டாள் அணி யார் தெரியுமா? அது தென் ஆப்பிரிக்காதான். சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியடைந்திருந்தால், இந்தியா தொடரிலிருந்து வெளியேறியிருக்கும்,” என்றார்.
மேலும், உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால் போட்டியில் உள்ள மிக வலுவான அணியை ஆரம்பத்திலேயே வெளியேற்றுவதுதான் சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்தார்.
சூப்பர் 8 சுற்றில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், இந்திய அணி சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டது. அதன்பின் இந்தியா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இந்தியா ஜிம்பாப்வேவை வீழ்த்தியநிலையில், அதன்பின் ஆமதாபாத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் போட்டியின் முடிவு இந்தியாவுக்கு முக்கியமாக அமைந்தது. அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதனால் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டி குவார்ட்டர் பைனல் போன்று அமைந்தது.
அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று பின்னர் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. ஆனால் தென் ஆப்பிரிக்கா அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இறுதியில் இந்தியா கோப்பையை கைப்பற்றியது.