தென்ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டியது 2–வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டியது 2–வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
Published on

செஞ்சூரியன்,

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2வது ஒருநாள் கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 10 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில் இந்தியாதென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளிஸ்சிஸ் காயம் காரணமாக போட்டி தொடரில் இருந்து விலகியதால் 23 வயதான மார்க்ராம் கேப்டன் பொறுப்பை கவனித்தார். தென்ஆப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. டுபிளிஸ்சிஸ்க்கு பதிலாக அறிமுக வீரராக கயா ஜோண்டோ அணியில் இடம் பிடித்தார். பெலக்வாயோ நீக்கப்பட்டு இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி சேர்க்கப்பட்டார்.

அபார பந்து வீச்சு

டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசிம் அம்லா, குயின்டான் டி காக் ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்திய பந்து வீச்சாளர்கள் துல்லியமாக தாக்குதல் தொடுத்து தென்ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி அளித்தனர்.

9.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 36 ரன்னாக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா (23 ரன், 32 பந்துகளில் 4 பவுண்டரியுடன்) வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அந்த அவுட்டை எதிர்த்து டி.ஆர்.எஸ்.முறையில் அவர் அப்பீல் செய்தார். ஆனால் அந்த மேல்முறையீடு தோல்வியில் முடிந்தது. அடுத்து கேப்டன் மார்க்ராம் களம் கண்டார்.

விக்கெட்டுகள் சரிவு

11வது ஓவர் முதல் விராட்கோலி சுழற்பந்து வீச்சாளர்களை பந்து வீச அழைத்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. 13வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் (20 ரன், 36 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்த ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அந்த ஓவரில் முதல் பந்தில் மார்க்ராமையும் (8 ரன்), 5வது பந்தில் டேவிட் மில்லரையும் (0) ஆட்டம் இழக்க வைத்து அசத்தினார். அது அவருக்கு முதல் ஓவர் என்பது குறிப்பிடத்தக்கது. அணியின் ஸ்கோர் 51 ரன்னாக இருக்கையில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் தென்ஆப்பிரிக்க அணி நிலைகுலைந்து போனது.

டுமினி 25 ரன்

5வது விக்கெட்டுக்கு கயா ஜோண்டோ, டுமினியுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 99 ரன்னாக உயர்ந்த போது அறிமுக வீரர் கயா ஜோண்டோ (25 ரன்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். டுமினி, கயா ஜோண்டோ ஜோடி 5வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் விக்கெட்டுகள் மள, மள வென்று சரிந்தன. டுமினி 25 ரன்னிலும், ரபடா 1 ரன்னிலும், மோர்னே மோர்கல் 1 ரன்னிலும், இம்ரான் தாஹிர் ரன் எதுவும் எடுக்காமலும், கிறிஸ் மோரிஸ் 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

தென்ஆப்பிரிக்கா 118 ரன்னில் சுருண்டது

தென்ஆப்பிரிக்க அணி 32.2 ஓவர்களில் 118 ரன்னில் சுருண்டது. கடைசி 19 ரன்களில் 5 விக்கெட்டுகள் சரிந்தன. தப்ரைஸ் ஷம்சி ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் நின்றார். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com