முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கையை எளிதில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கையை எளிதில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. அதில் பிளிஸ்சிஸ் சதம் அடித்து அசத்தினார்.
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கையை எளிதில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
Published on

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (8 ரன்), உபுல் தரங்கா (9 ரன்) இருவரும் நிகிடியின் வேகத்தில் வீழ்ந்தனர். மிடில் வரிசையில் ஒஷாடே பெர்னாண்டோ (49 ரன்), குசல் மென்டிஸ் (60 ரன்), தனஞ்ஜெயா டி சில்வா (39 ரன்) குறிப்பிடும்படி ஆடினர். இலங்கை அணி 47 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க தரப்பில் நிகிடி, இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனது 11-வது சதத்தை அடித்த கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 112 ரன்களும் (114 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 81 ரன்களும் (72 பந்து, 11 பவுண்டரி) எடுத்தனர். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 6-ந்தேதி செஞ்சூரியனில் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com