

கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் நடைபெற்ற போட்டிகளின்போது தென் ஆப்பிரிக்க வீரர் கேஷவ் மகராஜ் களமிறங்கும்போதெல்லாம், பிரபாஸ் நடிப்பில் பல மொழிகளில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராம் சியா ராம்' பாடல் ஒலிபரப்பப்பட்டது.
இந்நிலையில் இந்த பாடல் ஒலி பரப்பப்பட்டதன் ரகசியத்தை கேஷவ் மகராஜ் கூறியுள்ளார். அதில், ' நான் களமிறங்கும்போதெல்லாம் 'ராம் சியா ராம்' பாடல் ஒலிபரப்ப வேண்டுமென கேட்டுக்கொண்டது நான்தான். என்னைப் பொறுத்தவரை, கடவுள்தான் எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருந்தார். அதனால் கடவுளுக்கு என்னால் முடிந்ததை செய்தேன். மதம், கலாச்சாரத்தை மதிப்பது முக்கியம்தான். ஆனால் நான் களமிறங்கும்போது 'ராம் சியா ராம்' பாடல் பின்னணியில் ஒலிப்பது இனிமையான உணர்வாக உள்ளது' என்று கூறினார்.