ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித்திற்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் ஹெயின்ரிச் கிளாசன் சேர்ப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஓராண்டு தடைக்குள்ளான ஸ்மித்திற்கு பதிலாக தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஹெயின்ரிச் கிளாசன் சேர்க்கப்பட்டு உள்ளார். #HeinrichKlaasen
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித்திற்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் ஹெயின்ரிச் கிளாசன் சேர்ப்பு
Published on

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான 8 அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். ஐ.பி.எல். ஏலத்தில் அவரை ரூ.12 கோடி மதிப்பில் அந்த அணி தக்க வைத்து கொண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் வருகிற சனிக்கிழமை தொடங்க உள்ளன.

இதில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் 2 முறை பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்த நிலையில், கேப்டவுனில் சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட், சொரசொரப்பான மஞ்சள் நிற காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் இருப்பது தெரியவந்தது.

இதில், மூன்று பேரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களுக்கான நடத்தை விதி பிரிவு 2.3.5-ஐ மீறி இருப்பது உறுதியானது. இதையடுத்து ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடையும், பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் ஆட தடையும் விதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தடை எதிரொலியாக ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கால்பதிக்க அனுமதி கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே செயல்படுவார். ஸ்மித்திற்கு பதிலாக தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஹெயின்ரிச் கிளாசன் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரை ரூ. 50 லட்சம் மதிப்பில் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்திருந்தது.

26 வயது நிறைந்த கிளாசன் தென்னாப்பிரிக்க அணிக்காக 4 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த போட்டிகள் அனைத்தும் கடந்த மாதம் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணிக்கு எதிராக நடந்தன.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள வார்னருக்கு பதிலாக இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com