ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த வீடியோ விவகாரம்: லலித் மோடி மீது ஹர்பஜன் காட்டம்

17 ஆண்டுக்கு பிறகு ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை லலித் மோடி சமீபத்தில் வெளியிட்டார்.
மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது சீசனில் மொகாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்ற பிறகு திடீரென மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் ‘பளார்’ விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னத்தில் கைவைத்தபடி ஸ்ரீசாந்த் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சி மறைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த சீசனில் எஞ்சிய 11 ஆட்டங்களிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட ஹர்பஜன்சிங்குக்கு தடை விதித்தது. அதன் பிறகு பலக்கட்டங்களில் ஹர்பஜன் சிங்கிடமும் சரி, ஸ்ரீசாந்திடமும் சரி எதற்காக இருவரிடையே சண்டை ஏற்பட்டது என கேட்கப்பட்ட போது பதில் சொல்லாமல் சிரித்தே மழுப்பினர்.
இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடனான யூடியூப் உரையாடலின் போது, ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பகிர்ந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆட்டம் முடிந்து வீரர்கள் கைகுலுக்கும் போது, ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் தடாலடியாக அடிப்பதும், பிறகு இருவரும் ஒருவரையொருவர் அடிப்பார் போல் பாயும் போது நடுவர்கள், சக வீரர்கள் சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இப்போதும் அவர்கள் எதற்காக மோதிக் கொண்டார்கள், ஹர்பஜன்சிங்கை கோபமூட்டும் வகையில் ஸ்ரீசாந்த் என்ன சொன்னார் என்பது மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில் இந்த வீடியோவை சுயநல நோக்கங்களுடன் லலித் மோடி வெளியிட்டதாக ஹர்பஜன் சிங் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “வீடியோ கசிந்த விதம் தவறு. அது நடந்திருக்கக் கூடாது. அதன் பின்னால் அவர்களுக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம். அது 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம். மக்கள் அதனை மறந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் அதை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டுகிறார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம்,. அந்த சமயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் ஏதோ நடந்து கொண்டிருந்தது. தவறுகள் நடந்தன, அதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம். அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நான் பலமுறை கூறியிருக்கிறேன். நான் தவறு செய்துவிட்டேன். மனிதர்கள் தவறு செய்கிறார்கள், நானும் ஒரு தவறு செய்தேன். நான் மீண்டும் தவறு செய்தால் என்னை மன்னிக்கும்படி விநாயகரிடம் கேட்டுக் கொண்டேன்” என்று கூறினார்.
முன்னதாக ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரியும் லலித் மோடியை ஆவேசமாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.






