ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் நியமனம்


ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் நியமனம்
x

Image Courtesy: @ACCMedia1

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

துபாய்,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்து வந்த ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக கடந்த 1ம் தேதி பதவி ஏற்று கொண்டார். 2019-ம் ஆண்டு பி.சி.சி.ஐ செயலாளராக ஜெய்ஷா முதன் முதலாக பதவியேற்றார். அதன் பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த ஜெய்ஷா தற்போது ஐ.சி.சி தலைவராக பதவியேற்றுள்ளார் .

முன்னதாக ஐ.சி.சி. தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்தார். 2020-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது 4 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஷா ஐ.சி.சி தலைவராக பதவியேற்றதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவி காலியானது.

இந்த பதவிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா இன்று பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


1 More update

Next Story