தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது இலங்கை அணி

போர்ட் எலிசபெத்தில் நடந்த 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை இலங்கை அணி இரண்டரை நாட்களிலேயே அடக்கியதுடன், டெஸ்ட் தொடரையும் வசப்படுத்தி புதிய வரலாறு படைத்தது.
தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது இலங்கை அணி
Published on

போர்ட் எலிசபெத்,

இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 222 ரன்களும், இலங்கை 154 ரன்களும் எடுத்தன. 68 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா வெறும் 128 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. ஒஷாடே பெர்னாண்டோ (17 ரன்), குசல் மென்டிஸ் (10 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை பேட்ஸ்மேன்கள், தென்ஆப்பிரிக்க பந்துவீச்சை திறம்பட சமாளித்து மளமளவென ரன்களை திரட்டினர். ஒஷாடே-மென்டிஸ் கூட்டணியை தென்ஆப்பிரிக்க பவுலர்களால் உடைக்க முடியவில்லை. உணவு இடைவேளைக்கு முன்பாக இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 45.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 197 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒஷாடே பெர்னாண்டோ 75 ரன்களும் (106 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), குசல் மென்டிஸ் 84 ரன்களும் (110 பந்து, 13 பவுண்டரி) விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்தது. ஏற்கனவே முதலாவது டெஸ்டில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை திரில் வெற்றி கண்டிருந்தது.

தென்ஆப்பிரிக்க மண்ணில், ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒரு அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். மேலும், தென்ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை ருசித்த 3-வது வெளிநாட்டு அணி என்ற சாதனை பட்டியலிலும் இலங்கை இணைந்தது. ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இங்கு சாதித்து இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து துவண்டு போன இலங்கை அணி புதிய கேப்டன் கருணாரத்னேவின் தலைமையில் தென்ஆப்பிரிக்காவுக்கு பயணித்தது. புயல்வேகப் பந்து வீச்சாளர்களை கொண்ட தென்ஆப்பிரிக்காவிடம் அதுவும் அவர்களது சொந்த மண்ணில் இலங்கை தாக்குப்பிடிப்பது கடினம் என்றே கூறப்பட்டது. ஆனால் போதிய அனுபவம் இல்லாத இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவுக்கு ஒட்டுமொத்தமாக தண்ணி காட்டி விட்டது. உள்ளூரில் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் தொடர்களை வென்று இருந்த தென்ஆப்பிரிக்காவின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது. இந்த தோல்வியின் மூலம் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க அணி 3-வது இடத்துக்கு சரிந்தது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com