

கொழும்பு,
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
லோகேஷ் ராகுல் எங்களது ஸ்திரமான தொடக்க ஆட்டக்காரர். கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணிக்காக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே அவர் அணிக்கு திரும்பி, டெஸ்ட் கிரிக்கெட்டை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு தகுதியானவர். நிச்சயம் இந்த டெஸ்டில் அவர் இடம் பெறுவார். அவருக்கு இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் வழிவிடுவர்.
அணிக்கு மிகப்பெரிய ஸ்கோர் தேவை என்று வந்த போதெல்லாம் லோகேஷ் அபாரமான பங்களிப்பை அளித்து உள்ளார். பயிற்சி ஆட்டத்தில் கூட அரைசதம் அடித்தார். எனவே அணியில் இடம் உறுதி என்ற உணர்வை அவருக்கு ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. அவருக்கு அணி நிர்வாகமும், கேப்டனாகிய நானும் 100 சதவீதம் ஆதரவாக இருக்கிறோம். ஆனால் மறுபிரவேசம் செய்யும்போது, வலுவான வீரராக உருவெடுக்க வேண்டியது அவசியமாகும்.
ஆடுகளத்தை பார்க்கும் போது உறுதியாக முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். அதுவே எங்களுக்கு ஆவலை ஏற்படுத்துகிறது. ஒரு அணியாக இது போன்ற ஆடுகளங்களில் விளையாடவே எப்போதும் விரும்புகிறோம். இதில் போட்டி முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நல்ல பார்ட்னர்ஷிப் அமையும் போது, அவசரம் காட்டாமல் பேட்ஸ்மேன்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.
இவ்வாறு கோலி கூறினார்.
ரிஸ்க் எடுத்து ஆடுவேன் சன்டிமால்
இலங்கை கேப்டன் சன்டிமால் நிருபர்களிடம் கூறுகையில், 2015ம் ஆண்டு காலேயில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் நான் சதம் (59 ரன், 162* ரன்) அடித்தேன். அது ஒரு நல்ல இன்னிங்ஸ். அதன் மூலம் நாங்கள் வெற்றி பெற்றோம். இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக விளையாடும் போது, பந்து வீச்சோ, பேட்டிங்கோ ரிஸ்க் எடுத்து ஆட வேண்டும். அப்படி செய்தால் நன்றாக செயல்பட முடியும். அதைத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலே டெஸ்டில் செய்தேன். அது போன்று இந்த தொடரிலும் செயல்படுவதை எதிர்நோக்கி உள்ளேன்.
காய்ச்சலில் இருந்து விடுபட்டு நன்றாக இருக்கிறேன். மூச்சு பிரச்சினைக்காக இன்ஹேலர்மருந்தை பயன்படுத்திக் கொள்ள ஐ.சி.சி. அனுமதி அளித்து இருப்பதற்கு நன்றி. விரலில் லேசான காயம் அடைந்த ஹெராத் உடல்தகுதி பெற்று விட்டார் என்றார்.