

கேப்டவுனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் புதுவிதமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். பீல்டிங் செய்த போது அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய மஞ்சள் நிற பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில் தெளிவாக பதிவானது. அதை பயன்படுத்தி அவர் பந்தை சேதப்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியுள்ளது.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில் உணவு இடைவேளையின் போது வீரர்களிடம் இது பற்றி ஆலோசித்தேன். பான்கிராப்ட்டின் செயல் விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு அழகல்ல. இதற்காக வருந்துகிறேன். இதன் மூலம் கேப்டனாகிய எனது நேர்மை குறித்தும், அணியின் நேர்மை குறித்தும் கேள்விகள் எழுகிறது. வருங்காலத்தில் இது போன்று மீண்டும் நடக்கக்கூடாது என்றார்.
பான்கிராப்ட் கூறுகையில், நடுவர்களிடம் நான் பேசினேன். என் மீது பந்தை சேதப்படுத்த முயற்சித்ததாக குற்றச்சாட்டு சுமத்தி இருக்கிறார்கள் என்றார். ஐ.சி.சி. போட்டி நடுவரின் விசாரணைக்கு பிறகே பான்கிராப்ட் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும். 25 வயதான பான்கிராப்ட் முதல் இன்னிங்சில் 77 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதிரடி நடவடிக்கை
இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னரை நீக்கி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான எஞ்சி உள்ள போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக டிம் பெயின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் மீது பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டார் ஸ்டீவ் ஸ்மித். தனக்கு தெரிந்தே அச்சம்பவம் நடைபெற்றது எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். பந்து சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.